இந்தியாவில் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றலாம் என செப். 30ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் வழங்கி மாற்றி வருகின்றனர். அதோடு பலரும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் அமேசான் நிறுவனம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ”வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகளை அமேசான் நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரி முறையில் வாங்கிக் கொள்ளாது” என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ”மூன்றாவது தரப்பு கூரியர் நிறுவனம் மூலம் அமேசான் பொருட்களை வாங்கினால் ஏற்றுக் கொள்ளப்படலாம்” என தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து அதனை திரும்ப பெற்று வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 93 சதவீதத்துக்கும் அதிகமான ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டு விட்டதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது.
இத்தகைய சூழலில் தான் அமேசான் நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரி முறையில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியில் இருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால் அமேசானில் பொருட்கள் வாங்குவோர் விழிப்போடு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.