கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியத்தில் இருந்து வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்யும் ஆணை வெளியிடபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களி்ல் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கான தண்டனை விவரங்கள், மக்கள் பார்வையில் தெரியும்படி காட்சிப்படுத்துதல் வேண்டும்.
அவசர காலங்களில் காவல் உதவியை பெறுவதற்கான வழிமுறைகள், போதுமான மின் விளக்குகள், நோயாளிகள், வெளிநபர்கள் நுழைவதை முறைப்படுத்துதல், சுற்றுச்சூழல், இரவு காவலர் நியமனம் உள்ளிட்ட பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்த வேண்டும். அவசர நிலையை தவிர மற்ற கூட்டங்களை அலுவலகம் நேரம் கடந்தோ, விடுமுறை நாட்களிலோ நடத்தக் கூடாது. அதேபோல், அனைவரும் நாகரிகமாகவும், கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிகழ்வுகள் தவிர்த்து, தேவையின்றி அறிக்கைகள் மற்றும் கூகுள் சீட் ஆகியவற்றை பணியாளர்களிடம் கோருவதை தவிர்க்க வேண்டும்.
பொது சுகாதாரத்துறையின்கீழ் பணியாற்றும் அனைவரும், முக வருகை பதிவு அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்களை பொறுத்தவரை, குடியிருப்பு பகுதிக்கான மின்கட்டணத்தை மட்டும் சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் செலுத்தினால் போதும். நிலைய கட்டிடங்களுக்கான மின்கட்டணத்தை அவர்கள் செலுத்த தேவையில்லை. அதை அரசின் நிதி ஒதுக்கீட்டில் செலுத்த வேண்டும்.
பழுதடைந்த 1,738 துணை சுகாதார நிலைய கட்டிடங்களுக்கு கழிவு நீக்க சான்றிதழ் பெறப்பட்டு, அந்நிலையங்களை சார்ந்த கிராம சுகாதார செவிலியர்களின் ஊதியத்தில் இருந்து வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்யும் ஆணை வெளியிடபட்டுள்ளது. இந்த சுகாதார நிலைய பட்டியல் https://www.tndphpm.com என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இத்துறையில் செயல்படுத்தப்படும் எந்த பணிகளுக்கும், மருத்துவ அலுவலர்களோ, களப்பணியாளர்களோ, அமைச்சுப் பணியாளர்களோ தங்களது சொந்த பணத்தை செலவிட தேவையில்லை. இவை, தேசிய நலவாழ்வு திட்டத்தில் மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் யாரும் ஈடுபட வேண்டாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.