தலைநகர் டெல்லியில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சாலையில் ஆபத்தான வகையில் சுற்றி திரிந்த மனிதரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்ற போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் நாது காலனி சௌக் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வலம் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிந்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எப்படியும் நம்மை கைது செய்து விடுவார்கள் என்று உணர்ந்த அந்த நபர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அப்போது அவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அந்த நபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் கத்தியை மீட்டு அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் அந்த நபரின் பெயர் கிரிஷான் ஷேர்வால் என்பதும் அவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. காயமடைந்துள்ள அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது உனக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.