திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் அமைந்துள்ளது அனலாடீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பஞ்சபூதலிங்கங்களும் அமைந்து இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோயில் அமைப்பு : கோயிலின் பிரதான வாசல் ஊரின் வடக்கு பக்கமாக கிழக்கு திசை நோக்கி சுற்றிலும் உயர்ந்த சுவர் எழுப்பி சாலகோபுர அமைப்புடன் உள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலின் வெளிச் சுற்றில் கிழக்குப் பக்கமாக செப்பு கவசம் பொருத்திய கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவை காணப்படுகிறது. மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட வாசலை தாண்டியதும் உள்ளே முக மண்டபம், மகா மண்டபம், அர்த்தம்ண்டபம் அதனையடுத்து கருவறை என்ற அமைப்பில் கோயிலானது கட்டப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சப்த கன்னியர், சூரியன், கன்னிமூல கணபதி, பர்வத வர்த்தினி உடனுறை பஞ்சாபகேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,பிரித்விலிங்கம், பைரவர் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அப்புலிங்கம் ஆகிய சன்னதிகள் சுற்றிலும் உள்ளது. சுவாமி சன்னதியில் இருந்து இடது புறம் சென்றால் தனி கோயிலாக அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு திரிபுரசுந்தரி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வலது கையை அபயமாகவும், இடது கையை வரதமாக காட்டியும் சாந்த சொரூபீணியாக அவள் காட்சி கொடுக்கிறாள்.
மேலும் நிருத்த விநாயகர், குமார முருகன், தில்லைக் கூத்தர், சிவகாமி அம்பாள், மணிவாசகப் பெருமான், மதுரை காளியம்மன், மகா கணபதி ஆகியோர் மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபத்தில் தனி சன்னதி கொண்டிருக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியுள்ள அனலாடீஸ்வரர் இருப்பது, எதிரியை அழிக்க செய்த யாகம் வளர்த்த இடம் என்பதால் இந்த ஈஸ்வரனை நாம் வணங்கினால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
திருமண தடை நீங்கும்.. குழந்தை பாக்கியம் அருளும்.. இந்தக் கோயிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதியில் செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை உள்ளவர்களின் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல் குழந்தை பேறு இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து தேனாபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
அம்பாளராக உள்ள திரிபுரசுந்தரி அம்மனிடம் நாம் என்ன கோரிக்கைகள் வைத்தாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அம்பாள் சன்னதி முன் உள்ள தாமரை வடிவிலான தீர்த்த கிணற்றிலிருந்து அபிஷேக தீர்த்தத்தை எடுத்துச் சென்று நோயுள்ளவர்கள் பருகினால் விரைவில் குணமாகும் என்பது சொல்லப்படுகிறது. மேலும் அம்மன் சன்னதிக்கு பின்னால் இருக்கும் நவகிரக சன்னதியில் குரு பகவான் அனுக்கிரக மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சனிபகவான் மட்டும் இங்கு குருபகவானை வழிபட மற்ற கிரகங்கள் சூரியனை நோக்கி இருப்பது சிறப்பாகும்.
Read more:IND vs NZ : சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு..!