fbpx

#Ban Rummy: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…! அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது அவர் தனது அறிக்கையில்; சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அங்கமுத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விசைத்தறி உரிமையாளர் அங்கமுத்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். விசைத்தறி மூலம் கிடைத்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் சூதாட்டம் ஆடிய அங்கமுத்து, அதிலிருந்து மீளமுடியாமல் அடிமையாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்டம் விளையாட பணம் இல்லாத நிலையில், மனைவியின் தாலியை விற்று, அந்த பணத்தில் சூதாடியுள்ளார். அந்தப் பணத்தையும் இழந்து விட்ட நிலையில் தான் கடுமையான மன உளைச்சல் காரணமாக அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் அந்தத் தடையை நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 8 மாதங்களில் மொத்தம் 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 7 பேர் கடந்த இரு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 8 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என்ற கவலையும், அச்சமும் ஏற்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல், உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Anbumani Ramadoss has insisted that the Tamil Nadu government should take action to ban online gambling.

Vignesh

Next Post

உணவு, உடலுறவு இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? சமந்தா சொன்ன பதில்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Sun Jul 7 , 2024
Between food and sex, which would you choose? Samantha's answer to a question asked in an interview is going viral on the internet.

You May Like