உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடன கலைஞராக இருந்து வருகிறார். இவர், கடந்த 14 ஆண்டுகளாக திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி, ராம்பூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, தனது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது, காரில் அவரை பின் தொடர்ந்த 6 பேர், அவரை தடுத்து நிறுத்தி சராமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலைக்குச் சென்றதும், அவரது பிறப்புறுப்பை அறுத்துவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பின்னர், சுயநினைவு திரும்பியதும் வலியால் கதறிய அந்த இளைஞர், நடந்த சம்பவத்தை போலீசில் புகாராக அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 31ஆம் தேதி சவான்னி, அனிதா, முஷகன், ஷிவம், சிம்ரன் மற்றும் காயத்ரி ஆகிய 6 திருநங்கைகளை கைது செய்தனர். இதுதொடர்பாக, விளக்கமளித்த போலீசார், ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தும் இரு கும்பலுக்கு இடையே ஏற்பட்ட போட்டி தகராறே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.