சிதம்பரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி இரவு அருகில் மளிகை கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கியுள்ளார். வாங்கிய பொருளுக்கு காசு கொடுக்காமல் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலச்சந்தர் வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து கடை மீது ஏற்றியுள்ளார்.
இதனை முன்கூட்டியே அறிந்த கடை உரிமையாளர் பிரபாகரன் கடையில் இருந்து வெளியே ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கடையில் உள்ள பொருட்கள் கார் மோதியதில் நாசமாகின. இந்த சம்பவம் குறித்து மளிகை கடைக்காரர் பிரபாகரன் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் 9 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தில் பாலச்சுந்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பாண்டி மகாத்மா காந்தி மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பாலச்சுந்தரை இன்று(4.3.2025) காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரித்தபோது காவல்துறையினரை மரியாதை இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது 9 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மறைந்த அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: நான்கரை வயது குழந்தை மீது ஏற்பட்ட ஆசை; துக்க வீட்டில் நடந்த கொடூர சம்பவம்..