கோவையில் உள்ள பூத் ஒன்றில் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. இந்நிலையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி கடிதம் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அக்கடிதத்தில் ‘BCUAF 07464’ என்கிற இயந்திரத்தில் அண்ணாமலைக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டும் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தை காண முடிந்தது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தது. இத்தேடலில் தமிழக பாஜக இளைஞர் அணியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் பிரவீன்ராஜ் என்பவர் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறி உண்மையான கடிதத்தின் படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
அப்படத்தில் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து தேடுகையில் கோவை மக்களவை தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை என்று சன் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் அதே கடிதத்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அக்கடிதத்திலும் BCUAF 07464 இயந்திரத்தில் அண்ணாமலைக்கு 101 கிடைத்ததாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கியதாக பரப்பப்படும் கடிதத்தின் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.
அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார். எனவே, அண்ணாமலை குறித்து பரவும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Read More : BECIL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.40,000..!!