தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது, அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணியின் இணைவோம் என எடப்பாடி நிபந்தனை போட்டதாக கூறப்படுகிறது.
இதனால், டெல்லிக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். பின்னர், மீண்டும் சென்னை திரும்பிய அண்ணாமலை, ”அமித்ஷாவிடம் பேசிய அனைத்தையும் நான் சொல்ல முடியாது. நான் ஒரு சாதாரண பாஜக தொண்டனாக கூட இருக்கிறேன் என்று கூட சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டின் நிலவரத்தை டெல்லி மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். இனி அவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்தே அண்ணாமலை நீக்கப்படுவது உறுதி என தகவல்கள் பரவின.
இதையடுத்து, புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்கவும் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டுமென்றால், பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை இருக்கக் கூடாது. அதுவும் நயினார் நாகேந்திரன் போன்ற அதிமுகவுடன் இணக்கமாக இருக்கும் ஒருவர், பாஜக தலைவராக பதவியில் இருந்தால் கூட்டணியும் சுமூகமாக இருக்கும் என்கின்றன.
இதற்கிடையே, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பதிலாக புதிய தேசிய தலைவர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில புதிய பாஜக தலைவர்களும் அறிவிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து பாஜக மேலிடம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.