காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், சமூக வலைதளங்களில் மத்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தேச விரோத கருத்துக்கள் பரவி வருவதாக தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்தை நேரில் சந்தித்த பாஜகவினர், அதற்கான நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனுவை வழங்கினர். இதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தேனி மாவட்டம் முழுவதும் குறிப்பாக உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் ராஜபாண்டி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெரியகுளத்தில் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக வாரந்தோறும் நடைபெறும் போராட்டங்களால், மாவட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவி இருக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது என்றும், இதனிடையே தேசிய புலனாய்வுத் துறை (NIA) கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
Read more: இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை.. உரிமையில் பேசினேன்..!! – யூடியூபர் இர்ஃபான்