அரசு மாதிரி பள்ளிகளில் திறன் அறிவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது .
இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரியில் இடம் பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளி மாணவரும் உயர் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு கல்லூரி சிற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை சாத்தியமாக இருந்த ஐஐடி, JEE, CLAT தேசிய சட்டப் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு ஆர்வமும் திறமையும் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளில் படித்த சுமார் 4000 மாணவர்கள் பள்ளி கல்வித்துறை கொடுத்த ஊக்கமும் பயிற்சியின் காரணமாக தேர்வு எழுதினர். அதில் வெற்றியும் பெற்று பல நூறு மாணவர்கள் அடுத்த நிலைக்குத் தேர்வாகியுள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஆர்வமும் திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக படிக்க வைக்கவும், தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீடித்த தொடர் கண்காணிப்பும் வழிகாட்டுதல் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு நடத்த திட்டமிடப்பட்டது.
இது மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது, அந்த நிலைப்பாட்டில் தற்பொழுதும் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழகத்தில் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கும் என தெரிவித்துள்ளார்.