22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் கோப்பையை தட்டி சென்றது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.
இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். மேலும் அவரது ஓய்வு பெறும் திட்டத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் என்பதால் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நூலையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழியெங்கும் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் மேள தாளங்கள் முழங்க, மக்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெற்றியை கொண்டாட இன்று பொது விடுமுறை அறிவித்த இருக்கிறது அர்ஜென்டினா அரசு.