fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை என்கவுன்டர்… மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்த காவல் அதிகாரி பணியிட மாற்றம்…! EPS கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேற்கொண்ட என்கவுன்டர்கள் குறித்து விசாரணை நடத்தி மாநில மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்த துணை காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் காவல் துறையினராலும், சமூக விரோதிகளாலும் மீறப்படும்பொழுது அவைகளை காப்பதற்காகவே அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. தற்போதைய ஸ்டாலினின் அலங்கோல திமுக ஆட்சியில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமைகள் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சிப் பிரமுகரையும், மற்றும் ஒருவரையும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான மணிக்குமார் அவர்கள் ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளரை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீஸிங் ராஜா ஆகிய மூவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டிருந்தார்.சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இரு நேர்வுகளிலும் விசாரணையை முடித்து ஆணையத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல் அந்த துணை காவல் கண்காணிப்பாளரை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவிற்கு ஸ்டாலினின் திமுக அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதுபோல், அரசுக்கு எதிராக துணை காவல் கண்காணிப்பாளர் ஏதாவது அறிக்கை தாக்கல் செய்திருப்பாரோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் திரு. ஸ்டாலினின் திமுக அரசால் ஆணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரை, மாநில மனித உரிமை ஆணையத்தில் பொறுப்பேற்கவிடாமல் திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வந்துள்ளன. தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

English Summary

Armstrong murder encounter… Police officer transferred after submitting report to Human Rights Commission

Vignesh

Next Post

வங்கக் கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! புயலாக மாறுமா..? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்..!!

Fri Oct 18 , 2024
The Indian Meteorological Department has predicted that a new low pressure area is likely to form in the Bay of Bengal on October 22.

You May Like