தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முதலீடு செய்து லாபத்தை மட்டும் எடுத்துச் சென்றவர்களை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆருத்ரா நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் பொதுமக்களிடம் மோசடி செய்ததாக நிறுவனத்தின் மீது மத்திய புலனாய்வுத் துறையில் உனக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்து லாபத்தை மட்டும் எடுத்துக்கொண்டவர்களின் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகின்றனர் .
இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் மூன்று லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும் என அறிவித்திருந்தனர். இதன்படி 1 லட்ச ரூபாயை முதலீடு செய்து 3 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு மீண்டும் முதலீடு செய்யாதவர்களின் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது. இவ்வாறு லாப பணமாக 600 கோடி ரூபாய் பொது மக்களிடம் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்க இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அவ்வாறு முதல் முறை முதலீடு செய்து லாபத்துடன் சென்றவர்களின் தகவல்களை சேகரித்து அவர்களுக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் துபாயில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் உரிமையாளரான ராஜசேகரை இந்தியாவிற்கு கொண்டுவந்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.