கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு, சாவித்ரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், புது பைக் ஒன்றை வாங்க ஆசைப்பட்ட ஸ்ரீமந்த்திடம், பைக் வாங்கும் அளவுக்கு கையில் பணம் இல்லை. இதனால் அவர் தனது மனைவியை விபச்சாரம் செய்து பணத்தை சம்பாதித்து வரும்படி கொடுமைப் படுத்தியுள்ளார். ஆனால் சாவித்திரி இதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீமந்த், தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஸ்ரீமந்த், தனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி உடலுறவிற்கு மறுத்துவிட்டார். இதனால் தனது ஆசையை கட்டுப்படுத்த முடியாத ஸ்ரீமந்த், தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சாவித்திரி, ஸ்ரீமந்த் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் ஸ்ரீமந்த், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது தெரிந்த பிறகும், அரிவாளை எடுத்து வந்து, தனது கணவரின் உடலை இரண்டாக வெட்டியுள்ளார்.
பின்னர், தனது கணவரின் உடலை துண்டுத்துண்டாக வெட்டி வீட்டில் இருந்த சிறிய டிரம்மில் போட்டு, அந்த டிரம்மை உருட்டியபடியே, வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் டிரம்மிலிருந்த உடல் துண்டுகளை, வயலில் வீசியுள்ளார். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய அம்மிக்கல், கத்தி ஆகியவற்றை கிணற்றில் போட்டுள்ளார். பின்னர், டிரம்மையும் நன்கு கழுவி விட்டு விவசாய கிணற்றில் போட்டுவிட்டார். தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த மெத்தை, ஆடைகளையும் கல்லைக்கட்டி கிணற்றில் போட்டுள்ளார். வீட்டில் இருந்த தடையங்கள் அனைத்தையும் மறைத்த அவர், நடந்தது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று தனது மகள்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், பொழுது விடிந்ததும், வயலில் கிடந்த ஸ்ரீமந்த் உடலை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிக்கோடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சாவித்திரி நடந்ததை எல்லாம் ஒப்புக்கொண்டார். மேலும், “எனது மகளை காப்பாற்ற வேறு வழி தெரியல, நான் ஜெயிலுக்கு போயிட்டா, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்.. என்னை விடுங்கள்” என்று கதறி அழுதார். எனினும் போலீசார் சாவித்ரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.