Assam: அஸ்ஸாம் அமைச்சரவை ‘அஸ்ஸாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 ஐ ரத்து செய்வதன் மூலம் மாநிலத்திற்குள் குழந்தை திருமணத்தை தடை செய்வதில் குறிப்பிட்ட நடவடிக்கையை எடுத்து இருக்கிறது . மேலும் இது பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு முக்கியமான பணி என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா இந்த பழமையான சட்டம் அகற்றப்பட்டது குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் மிக முக்கியமான நிகழ்வு எனவும் தெரிவித்திருக்கிறார்.
பிப்ரவரி 23ஆம் தேதி அன்று அசாம் மாநில சட்டசபையில் பழமையான அஸ்ஸாம் முஸ்லிம்கள் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்வதற்கான முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது . பழமையான முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின்படி பெண்கள் 18 வயதை அடையவில்லை என்றாலும் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியும். அதேபோல் ஆண்களும் 21 வயதை அடையவில்லை என்றாலும் அதற்கு முன்பு நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்வதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
தற்போது இந்த பழமையான சட்டத்தை தடை செய்ததன் மூலம் குழந்தைகள் திருமணத்தை தடை செய்வதற்கான முக்கியமான ஒரு மைல் கல்லை அசாம் அரசாங்கம் எட்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 94 இஸ்லாமிய திருமண பதிவர்களிடம் இருக்கும் திருமணம் தொடர்பான ஆவணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க மாவட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட பதிவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மக்கள் தொகையில் 34% முஸ்லிம்கள் உள்ளனர், மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி நபர்கள் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம் திருமண பதிவாளர்களுக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாயை அசாம் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “இது ஒரு காலனித்துவ சட்டம் என தெரிவித்தார். மேலும் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது புது சிவில் சட்டத்திற்கான பயணத்தில் ஒரு முக்கியமான படி” எனவும் கூறினார்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அசாம் மாகாணத்திற்காக பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய இந்த சட்டம் வழக்கற்றுப் போனதை தொடர்ந்து முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது