கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், பாஜகவினர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் காயமடைந்தனர். எதிர்விளைவுகளை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், 32 வது வார்டு பகுதியில், பாஜக சகோதர சகோதரிகள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அஇஅதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு என்ற சகோதரர் மற்றும் சில சகோதரிகள் காயமடைந்துள்ளனர்.
அதிமுக கூட்டணி, தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நவ்ஷாத் போன்ற நபர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள். இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
பாஜக ஜனநாயக வழியில் பயணிக்கும் கட்சி. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்று, வாக்கு சேகரிக்கச் செல்லும் பாஜக சகோதர சகோதரிகளைத் தடுப்பதும், தாக்குவதுமான கீழ்த்தரமான நிகழ்வுகள் நடைபெறுமேயானால், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளவும், சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாகக் கூறிக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தாக்குதலுக்குள்ளான சகோதரர் பிரபு அவர்களை, பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். சகோதரர் பிரபு அவர்களுக்கு உறுதுணையாக, தமிழக பாஜக எப்போதும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.