கூகுள் பே (Google Pay), ஃபோன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பேமெண்ட்களை செய்துவரும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. என்பிசிஐ என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது. அதாவது, பேமெண்ட்களை செய்யும்போது அதற்காக எடுத்து கொள்ளப்படும் நேரம் மாற்றப்படுகிறது.
அதாவது, இது முந்தைய நேரத்தைவிட பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இனி பேமெண்ட்கள் மேலும் வேகமாக அனுப்ப முடியும். இதில் பணம் அனுப்புதல், பெறுதல் பரிவர்த்தனைகளும் அடங்கும். மேற்கண்ட சேவைகளை யுபிஐ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் நேரம் தான் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பணம் அனுப்புதல் மற்றும் பெறதலுக்கு முந்தைய ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது.
ஆனால், தற்போது இது 15 நொடிகளாக குறைப்பட்டுள்ளது. பணம் அனுப்பிய பிறகோ அல்லது பெற்ற பிறகோ அதை செக் செய்ய பயன்படுத்தும் பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சேவைக்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்த நிலையில், இப்போது 10 நொடிகளாக குறைப்பட்டுள்ளது. பரிவர்த்தனை ரிவர்ஸ் செய்வதற்கு 30 நொடிகளாக இருக்கிறது. இதுவும் இப்போது 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பேமெண்ட் அனுப்பும்போது முகவரி சரிபார்ப்பு செய்ய எடுத்து கொள்ளப்படும் நேரமும் 15இல் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த டைம் லிமிட் மாற்றங்கள் யுபிஐ செயலிகளுக்கு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பேங்குகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பணத்தை அனுப்பும் பேங்க், பணத்தை பெறும் பேங்க் மற்றும் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் ஆப்கள் ஆகியவற்றுக்கு இந்த விதிகள் பொருந்தும். இந்த ரெஸ்பான்ஸ் டைம் லிமிட் மாற்றம் ஜூன் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.