தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி செய்லபடுத்தி வருகிறது. மாணவர்களின் வருகை மற்றும் செயல் திறன் இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, 2023 – 2024 கல்வியாண்டில் இந்த திட்டம் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும், இந்த திட்ட விரிவாக்கத்திற்காக ரூ. 33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களை கொண்ட காலை உணவு வழங்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளை அரசு தொடக்கப் பள்ளியில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும் என்றும், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் பொங்கல் அல்லது வெண் பொங்கல் வழங்கப்படும் என்றும், வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமாவும், வெள்ளிக்கிழமை கிச்சடி வகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.