கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை தனியார் போக்குவரத்து சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களில் பெண்கள் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சக்தி திட்டத்தால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தனியார் பேருந்து மற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், தனியார் வாகன சங்கங்கள் உள்பட பலருடன் அம்மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
அந்த பேச்சுவார்த்தையில் சக்தி திட்டத்தின் கீழ் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனியார் வாகன சங்கங்கள் முன்வைத்தன. அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, செப்டம்பர் 11 ஆம் தேதி பெங்களூருவில் தனியார் வாகனங்கள் இயக்கப்படாது என்று தனியார் போக்குவரத்து சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணிவரை பெங்களூருவில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாது என்றும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தனியார் வாகன சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு தனியார் பஸ் சங்கங்கள், ஆட்டோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட 32 சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சிகள் மற்றும் பள்ளி பேருந்துகள் பங்கேற்புடன் நாளை வேலைநிறுத்தம் செய்ய கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்கத்தின் கூட்டமைப்பு அதன் முடிவில் உறுதியாக இருப்பதால், நகரத்தில் பல சேவைகள் மற்றும் நிறுவனங்களின் வேலைகளை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள சில பள்ளிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பள்ளிகளில் நாளை நடக்கவுள்ள தேர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கும், புறப்படுவதற்கும் விமான நிலைய வண்டிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. Ola மற்றும் Uber போன்ற முக்கிய வண்டி சேவைகளும், IT துறை மற்றும் பிற வணிகங்களுக்கு சேவை செய்யும் தனியார் வண்டிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தம் காரணமாக,பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்துகள், அவற்றின் விமான நிலையச் சேவைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் நாளை நகரில் உள்ள வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பிற வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி திறந்து அல்லது மூடி வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.