உணவு சாப்பிட்டு முடித்த உடன், எதவாது ஒரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருப்பது உண்டு. அப்படி இனிப்பு சாப்பிடாமல் பலரால் இருக்கவே முடியாது. போதைக்கு அடிமையானது போல், இந்த பழக்கத்தை விட முடியாமல் இருப்பவர்கள் அநேகர். ஆனால் இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? இந்த பதிவின் மூலம் உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்..
சமீபத்தில், சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ ஒன்றில், இனிப்பு சாப்பிட்ட பிறகு, அதன் எதிர்மறை தாக்கத்தை குறைக்க தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் உண்மை தன்மை குறித்து, சென்னை பிராக்மாடிக் நியூட்ரிஷனின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், அதன் தாக்கம் குறையாது. ஆனால், வேறு சில வழிகளில் இது நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என்றார்.
இது போன்று இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் உயர்வை தடுக்க முடியும். ஏனென்றால், தண்ணீர் குடிக்கும் போது உடல் டிஹைட்ரேட் ஆகாமல் இருக்கும். ரத்த சர்க்கரை அளவு உடல் டிஹைட்ரேட் நிலையில் இருக்கும் போது தான் அதிகரிக்கும். நாம் குடிக்கும் தண்ணீர் வாயில் உமிழ்நீரை உற்பத்தி செய்வதன் மூலம் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகிறது.
மேலும், இது உணவை உடைக்க உதவுகிறது என்றும், இது உணவை மெல்லவும், விழுங்கவும் உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது என்றார். அது மட்டும் இல்லாமல், சாப்பிட்ட பிறகு நாம் தண்ணீர் குடிக்கும் போது, வாயில் ஆங்காங்கே ஒட்டியிருக்கும் மீதமுள்ள உணவு துகள்கள், வெளியே வந்து விடும். இதனால் பல் சொத்தை போன்ற பல பிரச்சனைகளை வராமல் தடுக்க முடியும்.
பொதுவாக ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்து அல்லது புரதத்துடன் இனிப்புகளை சாப்பிடுவதால், கிளைசெமிக் குறியீடு குறையும். இதனால் உடலுக்கு ஆரோக்கியம் தான். சர்க்கரை நோயாளிகளுக்கும் சாப்பிட உடன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்போது அவர்கள், வெள்ளை நிற சர்க்கரையைத் தவிர்த்து, வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவை சாப்பிடலாம். இல்லையென்றால், நீங்கள் ஒரு சிறிய துண்டு இனிப்பை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.