சித்தகத்தியின் பூக்கள் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தெரிந்துவிட்டால் கட்டாயம் அதை தேட ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு, சித்தகத்தியின் பூக்கள், இலைகள், விதைகள் என மொத்த செடியிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கிராமங்களிலும், சாலையோரங்களிலும் கிடைக்கும் இந்த செடி, தண்ணீர் இருக்கு இடத்தில தானாக விளைந்துவிடும். இதன் இலைகள் முருங்கைக்கீரை போலவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஒரு சில நேரத்தில், இதன் பூக்கள் கருப்பு, சிவப்பு நிறங்களிலும் இருக்கும்.
இந்த சித்தகத்தி இலைகள், சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கும். மேலும், உடலில் எங்காவது காயங்கள் ஏற்பட்டு, கட்டிகள் இருந்தால், இந்த இலையை அரைத்து கட்டினால் போதும். அந்த கட்டிகள் பழுத்து உடைந்துவிடும். இதனுடன் நீங்கள் சித்தகத்தியின் பூக்களையும் சேர்த்து அரைக்கலாம். அல்லது சித்தகத்தி இலைகளை நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து விட்டு, அதை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, கட்டிகளில் கட்டி வந்தாலும், அவை பழுத்து உடையும்.
அதேபோல, பலருக்கு இருக்கும் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகளுக்கு இது நிரந்தர தீர்வு அளிக்கும். இதற்கு சித்தகத்தி இலையுடன் சிறிது குப்பை மேனி இலை, கல் உப்பு சேர்த்து அரைத்து தடவுங்கள். ஒரு சில நிமிடங்கள் கழித்து தேய்த்து குளித்தால் போதும், உடம்பில் உள்ள சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகிவிடும். மேலும், நமைச்சல், அரிப்பு, வியர்க்குரு போன்ற எந்த பிரச்சனையும் வராது. இது மட்டும் இல்லாமல், நீங்கள் 15 மி.லி அளவு சித்தகத்தி இலையின் சாற்றை குடித்து வந்தால் கரப்பான், மேகரோகக் கிருமிகள் விலகிவிடும்.
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆம், சைனஸ் பிரச்சனை, மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்ப்பது, தலைபாரம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்கள், 10 சித்தகத்தி இலைகளை எடுத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர, இந்த பிரச்சனைகள் குணமாகும். அல்லது தேங்காய் எண்ணெய்யில் சித்தகத்தி பூக்களை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் காய்ச்ச நேரம் இல்லாதவர்கள், இந்த இலைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.. இவ்வளவு ஏன், முன்பெல்லாம் தேள் கடித்துவிடடால், சித்தகத்தி மரப்பட்டையை தான் அரைத்து பற்று போடுவார்களாம்..