பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே வாங்கி சாப்பிடும் பழம் தான் சீத்தாப்பழம். ஆம், உண்மை தான். பெரும்பாலும் யாரும் சீதாப்பழத்தை வாங்கி சாப்பிடுவது இல்லை. அவசரமான கால கட்டத்தில், சீதாப்பழத்தை சாப்பிடும் பொறுமை பலருக்கு இல்லை. இதனால் தான் பலர் இந்தப் பழத்தை வாங்குவது இல்லை. இனிப்பு மற்றும் மிக லேசான புளிப்பு சுவையை கொண்ட இந்தப் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஆம், இது குறித்து உணவியல் நிபுணரான தீபலட்சுமி கூறும் போது, “சீத்தாப்பழத்தை தினமும் மிதமான அளவில் சாப்பிடுவது, நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனென்றால், இந்தப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கல் அதிகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற மினரல்ஸ்களும் அதிகம் உள்ளது” என்றார்.
சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், இதில் டயட்ரி ஃபைபர் அதிகம் உள்ளதால் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளித்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அது மட்டும் இல்லாமல், இந்தப் பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால், அது நமது உடலில் உள்ள செல்களை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்சிலிருந்து பாதுகாக்க உதவும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இதனால் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆனால், மிதமான அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, சீத்தாப்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும், இதை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகள் அல்லது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.