2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தலைமையில் அக்கட்சியின் 17ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு மாக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கஷ்டமோ நஷ்டமோ தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் சீர்திருத்தம் கண்டிப்பாக தேவை என்றும் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றால் 30 கோடி தேவைப்படுகிறது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 100 கோடி தேவைப்படுகிறது, நான் கிட்டத்தட்ட 150வது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வன்முறை கருத்துக்களை பரப்பிய வடமாநில சாமியார் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இந்திய -பாரத் விவகாரம் குறித்து பேசிய சரத்குமார், இந்தியா என்ற பெயர் அனைவரது ஆழ்மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது என தெரிவித்தார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.