சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 132 நிறுவனங்களும் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும், 38 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உலக அளவில் திறன் மேம்பாடு பெரிய உந்து சக்தியாக உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். கோவை மற்றும் மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளன. தென்தமிழகத்தில் ரூ.16,709 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில் தொடங்க நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமாக முதலீடுகள் செய்கின்றனர். ஓராண்டில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் நிறுவனங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் 78 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. வட தமிழகத்தில் ரூ.5,300 கோடி முதலீடும், மத்திய தமிழகத்தில் ரூ.285 கோடி முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் ரூ.16,750 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.