ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு 17 மாநிலங்களில் கைவரிசையை காட்டி வந்த இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி கும்பலை கைது செய்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரம்பால் சிங் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பணிகளைப் போலவே இணையதள பக்கங்களை உருவாக்கி அவற்றில் வேலை வாய்ப்புகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து அதன் மூலம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, ஓடிஸா, ராஜஸ்தான் என 17 மாநிலங்களில் இந்த கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. மத்திய அரசின் வேலை வாய்ப்பு வரும் விளம்பரங்களைப் போலவே பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் விளம்பரம் செய்து வேலை தேடும் இளைஞர்களை அவர்களது இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க செய்து அவர்களுக்கான போட்டித் தேர்வுகளையும் நடத்தி இருக்கிறது இந்த கும்பல்.
மேலும் தங்களின் மேல் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக தங்களது போலி நிறுவனத்தின் மூலமாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் தங்களின் நிறுவனத்தின் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களையும் ஒளிபரப்பு செய்திருக்கிறது இந்த கும்பல். மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களைப் போலவே அச்சு அசலாக போலியான வேலை வாய்ப்பு தகவல்களை அந்த இணையதளங்களின் மூலம் பகிர்ந்து அதன் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை விண்ணப்பிக்க செய்து அவர்களிடமிருந்து விண்ணப்பத்திற்கான பதிவு கட்டணமாக ஒரு தொகையை வசூலித்து இதன் மூலம் மிகப்பெரிய மோசடியை செய்து இருக்கிறது இந்த கும்பல். இந்த கும்பலின் தலைவனை தான் தற்போது ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். இவனிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.