கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் பகுத்து இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் 8,000 வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆர்ப்பூக்கரை மற்றும் தலையாழம் ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ தலைமையில் மாவட்ட உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ., சுற்றளவில் உள்ள பறவைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்பார்வையில் அழிக்க, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதிகளில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 13 முதல் மூன்று நாட்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோழி, வாத்து, பிற நாட்டுப் பறவைகள், முட்டை, இறைச்சி மற்றும் உரம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் மையப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 19 உள்ளாட்சி அமைப்புகளில் வழக்கத்திற்கு மாறாக கோழி, வாத்து அல்லது பிற நாட்டுப் பறவைகள் இறந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ஆட்சியர் உத்தரவிட்டார். பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.