ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திரைத்துறை பிரபலங்கள் முதல் விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அயோத்தி நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் நாளை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்களில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் உட்பட எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜை ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி செய்யும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் “தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்தை பாரதிய ஜனதா கட்சி வழங்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தடைகளை கண்டு ஒருபோதும் அஞ்சுவதில்லை எனக் கூறிய அண்ணாமலை சேலம் இளைஞர் அணி மாநாட்டிற்கு அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.