தேனி மாவட்டம் கம்பம் நகர் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயக்குமார். இவர் தனது 2ஆவது மனைவி அமுதாவுடன் கம்பம்மெட்டு காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் அமுதா உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அமுதாவின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அமுதாவின் கணவரான எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரின் முதல் மனைவி மற்றும் 2 மகன்கள் உத்தமபாளையத்தில் உள்ளனர். அமுதாவுடன் கடந்த சில ஆண்டுகளாக ஜெயக்குமார் வசித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் ஜெயக்குமார், அமுதா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்படி, சம்பவத்தன்று இருவரும் மது அருந்திய போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஜெயக்குமார், அமுதாவை சராமரியாக தாக்கியுள்ளார். இதில், அமுதா உயிரிழந்தார். இந்நிலையில், கொலை வழக்கில் ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.