அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்வர், இன்று காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.