தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் இந்தாண்டு பள்ளி வகுப்புகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும், பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் ஈடுசெய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. பல பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் வெவ்வேறு வகுப்புகளுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் 1-5, 5-10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த தேர்வுகள் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதியும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதாவது 1 முதல் 3ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 23ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல், 4-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே, 4-12ஆம் வகுப்புகளுக்கான விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.