மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. இதுவரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 18 ராணுவ வீரர்கள், 6 பொதுமக்கள் என மொத்தம் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்..
இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டு இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணியில் அசாம் ரைபிள்ஸ், துணை ராணுவப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ள நிலையில் 38 பேரை மேலும் காணவில்லை..
மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை, மீண்டும், ஏற்கனவே நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அந்த பகுதிக்கும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.. மீட்பு பணிகளை துரிதப்படுப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.. மணிப்பூரில் அடுத்தடுத்த நடந்த நிலச்சரிவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது..
இதனிடையே இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் என் பிரேன் சிங்அறிவித்துள்ளார். இந்த நிலச்சரிவு தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்கள் வழியாக பாயும் இஜெய் ஆற்றின் வேகத்தையும் பாதித்துள்ளது… நிலைமை இன்னும் சீரடையவில்லை என்பதால், துணை ஆணையர் பொது மக்களை, ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.