அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்திருந்தது. இதன் மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனினும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கிடையே நடைபெற்று வரும் அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதிமுகவில் தனது உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார் ஓபிஎஸ்.