இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 100.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். பிரதமர் மோடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவதுண்டு. இந்நிலையில், 100 வயதான ஹீரா பென் மோடிக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் அகமதாபாத்தில் உள்ள இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று காலமானார்.