தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. வெப்ப அலையால் சிலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து, அதற்கு நேர்மாறாக பல இடங்களில் கோடை மழையும் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாக அண்மையில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இதனால், இந்தாண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதரண வானிலை சூழல்கள் நிகழலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ’கள்ளக்கடல்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருக்கும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே `கள்ளக்கடல்’ நிகழ்வு என்கின்றனர். அதன்படி, கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரை கடல் எழும்பக்கூடும் என்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பொறுத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.