ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்துடன் எல்எம்வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலனை எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தை எல்எம்வி3 ராக்கெட்டில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பொருத்தினர். மேலும், சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதற்கான திட்ட ஒத்திகை நிகழ்வும் 3 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. விண்கலத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலனுடன் எல்எம்வி 3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் தோல்வியில் முடிந்தது. இந்த விண்கலத்தின் பேலோடாக விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளே பிரக்யான் என்ற ரோவர் இருக்கிறது. எல்விஎம் 3 ராக்கெட் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தை நேராக ஜிடிஓ எனப்படும் பூமியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி உள்ள இடத்திற்குக் கொண்டு சென்று விடும். அங்கிருந்து இந்த பேலோடு தனியாகக் கழன்று திரஸ்ட் மூலம் இயங்க துவங்கும்.
சுமார் 40 நாட்கள் வரை இந்த பேலோடு நிலவை நோக்கி மெல்ல மெல்ல நகரும். சரியாக நிலவிலிருந்து நூறு கிலோமீட்டர் முன்பு வரை இந்த பேலோடு திரஸ்ட் மூலம் இயக்கப்பட்டு நிலவிற்கு அருகில் செல்லும். பின்னர், அங்கிருந்து விக்ரம் லேண்டர் தனது லேண்டிங் பணியைத் துவங்கிவிடும். முதலில் ஃப்ரீ பாலாக கீழே விழும் விக்ரம் லேண்டர் நிலவில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் தனது இன்ஜினை ஆக்டிவேட் செய்து தனது வேகத்தைக் குறைக்கும். அதன்படி, விக்ரம் லேண்டர் ஒரு நொடிக்கு 3 மீட்டர் கீழ் இறங்கும் அளவிற்கு வேகத்தில் நிலவில் தரை இறங்கும். இதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குச் சவாலான விஷயமாக அமையப் போகிறது.
கடந்த முறை இப்படியாக விக்ரம் லேண்டர் லேண்டிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதால் தான் சந்திரயான்-2 வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால், தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் லேண்ட் செய்யும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த விக்ரம் லேண்டரை மாற்றியமைத்துள்ளனர். தற்போது திட்டமிட்டுள்ளது படி ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24ஆம் தேதி இந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.