நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..
மேற்கு நியூயார்க்கில் உள்ள சௌடௌகுவா கல்வி நிறுவனத்தில் சல்மான் ருஷ்டி சொற்பொழிவு ஆற்றவிருந்தார்.. அவரின் பெயர் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மர்ம நபர் ஒருவர், சல்மான் ருஷ்டியை பலமுறை கத்தியால் குத்தினார்.. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருஷ்டியின் கல்லீரல் குத்தப்பட்டு சேதம் அடைந்ததாக அவரது முகவர் கூறினார்.
அவருக்கு பல மணி நேர அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பிறகு அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. அவரின் கைகளில் உள்ள நரம்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அவர் தனது கண் பார்வையை இழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள இலக்கியவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ருஷ்டியை கத்தியால் குத்திய சந்தேக நபர் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹாடி மாதர் (24) என அடையாளம் காணப்பட்டதாக நியூயார்க் போலீசார் தெரிவித்தனர். சல்மான் ருஷ்டியை தாக்கிய உடனேயே அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
75 வயதான சல்மான் ருஷ்டி தனது புக்கர் பரிசு பெற்ற 1981 நாவலான ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ (Midnight’s Children’) மூலம் பிரபலமடைந்தார், ஆனால் அவரது பெயர் ‘தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses’)க்குப் பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டது. இப்புத்தகம் 1988 ஆம் ஆண்டு முதல் ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் பல முஸ்லிம்கள் இது தெய்வ நிந்தனை என்று கருதுகின்றனர்.
இந்தியாவில் பிறந்த ருஷ்டி கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது நான்காவது புத்தகமான தி சாத்தானிக் வசனங்கள் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு, அவர் பொது மக்களின் பார்வையில் இருந்து விலகி இருந்தார், பெரும்பாலும் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அவர் 1990 களில் பல நாவல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..