டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட சம்பவத்தில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி லுத்தியன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் அளித்த 25 பக்க அறிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ”டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் நீதிபதியின் பாதுகாவலர் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த 14ம் தேதி காலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. மறுநாள் காலையில், தீவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்து 4 முதல் 5 மூட்டையில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
இதையடுத்து, 17ஆம் தேதி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நேரில் அழைத்து, பணம் குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனக்கு எதிராக சதி செய்யப்படுவதாக கூறினார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது விளக்கம் குறித்து தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ”என்னுடைய வீட்டில் எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட வீடியோவை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றல், அது உண்மைக்கு மாறாக இருந்தது. இது ஒரு திட்டமிட்ட சதி. அந்தப் பணம் ஸ்டோர் ரூமுக்குள் எப்படி வந்தது என்பது எனக்கு தெரியாது. நானோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களோ அந்த அறையில் பணத்தை வைக்கவில்லை. பணம் மீட்கப்பட்ட நாளில் எனது குடும்பத்தினரிடமோ, ஊழியர்களிடமோ அந்த பணம் காட்டப்படவில்லை. தீ விபத்து நிகழ்ந்த போது நானும் எனது மனைவியும் போபால் சென்றிந்தோம். எனது மகளும், என் தாயாரும் தான் வீட்டில் இருந்தனர்.
மீண்டும் சொல்கிறேன், அந்த பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எங்களின் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானதாக உள்ளது. வங்கிகள், யுபிஐ மற்றும் கார்டுகள் மூலமாக மட்டுமே நாங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட நீதிபதியை நீக்குவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு, தாமாக ராஜினாமா செய்வார் அல்லது விருப்ப ஓய்வு பெறுவார். அவரே பதவி விலகாத பட்சத்தில், அவரை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தொடங்குவார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் ஆதாரங்கள் வழங்கப்பட்டு நீதிபதி நீக்கம் செய்யப்படுவார்.
Read More : ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையா..? இனி வீட்டிலிருந்தே ஈசியாக மாற்றிக் கொள்ளலாம்..!! மக்களே எளிய முறை இதோ..!!