ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சனாதன யாத்திரையை தொடங்கினால், நிச்சயம் அறிவித்துவிட்டுதான் செய்வேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழிபாடு செய்த பின், திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், ”தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம் மிகவும் மனமகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் கடவுளிடம் வேண்டுவேன். தற்போது பழனி முருகனிடமும் அதைத்தான் வேண்டியுள்ளேன்.
பழனியில் இருந்து திருப்பதி கோவிலுக்கு தினமும் பேருந்து இயக்கப்பட்டதும், கொரோனா காலத்தில் அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதும் தற்போதுதான் தனக்கு தெரியவந்தது. எனவே, பழனி – திருப்பதி இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படும். இதுதொடர்பாக ஆந்திர போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பழனியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.