சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உணவு மற்றும் வாழ்க்கை முறை சரியாக இல்லாதது தான். இந்த சர்க்கரை நோய் வந்து விட்டால் காலம் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிருக்கும். உணவே மருந்து என்ற நிலை போய், மருந்தே உணவு என்ற நிலை உருவாகிவிடுகிறது.
இதற்கு பதில், சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைத்துக் கொண்டு, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளசமிக் குறியீட்டை கொண்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
பெரும்பாலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிட தயங்கும் ஒரு உணவு என்றால், அது சர்க்கரை வள்ளி கிழங்கு தான். இனிப்பாக இருக்கும் இந்த கிழங்கை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா இல்லையா? என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது.
அவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுவது மட்டும் இல்லாமல், எடையை குறைக்கவும் உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்து விடும்.
ஆனால்ம், இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இந்த செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு வள்ளி கிழங்கில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளதால், இது மற்ற வகை கிழங்குகளை விட ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டாலும் அதை குறைந்த அளவு, எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுட்டு சாப்பிடாமல், அதை ஆவியில் நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது. இதனால், சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு குறையும். சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைக்க விரும்பினால், வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது தான் சிறந்தது..