ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக ரயில்வே துறைக்கு ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் ரயில்களில் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது ரயில் சேவை சீரடைந்துள்ள போதும் நிறுத்தப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. அதை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக ரயில்வே பதில் அளித்துள்ளது.