“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க முடியும் என்ற மத்திய அமைச்சரின் ஆணவப்பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பையும், சமஸ்கிருத ஆதிக்கத்தையும் மேலோங்கச் செய்யும் நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக்கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..?
தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை மூடி மறைத்து, வடவரின் வரலாறே இந்திய வரலாறு என்று கற்பிக்க முயற்சி நடக்கிறது. மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் இத்தகைய செயல்பாடுகள் இந்திய அரசமைப்பிற்கே எதிரானதாகும். புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி தர முடியும் என்கிற மத்திய அரசு, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் வேண்டாம் என்று கூறுமா? தமிழ் மக்களின் வரிப்பணம் இனிக்கிறது..? அதை திருப்பிக் கேட்டால் கசக்கிறதா..?
மத்திய அரசு தரவேண்டிய 2,152 கோடி ரூபாய் என்பது தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணம்தானே தவிர, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இடும் பிச்சையல்ல.
ஒவ்வாத உணவைத் திணித்தால் எப்படி உடல் ஏற்காது உமிழ்ந்துவிடுமோ, அப்படி ஒவ்வாத இந்தியை திணித்தால் தமிழ் மக்களும் உமிழ்ந்து விடுவார்கள். பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை உண்மையிலேயே திமுக அரசு ஏற்கவில்லை என்றால் இல்லந்தோறும் கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது ஏன்? பிஎம் ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்?
புதிய கல்விக்கொள்கையை திமுக அரசு ஒவ்வொன்றாகச் செயல்படுத்தியதன் விளைவுதான் முழுதாக ஏற்குமாறு கட்டாயப்படுத்தும் துணிவை பாஜக அரசுக்கு அளித்துள்ளது. ஆகவே, தற்போது புதிய கல்விக்கொள்கையைத் திமுக அரசு எதிர்ப்பது போல நடிப்பது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகும். புதிய கல்விக்கொள்கையை திணிக்க முயலும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குச் சேர வேண்டிய நிதியை தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும் உடனடியாகச் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.