தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை உற்சாகமாகச் செய்ய அரசால் அளிக்கப்படுவதுதான் மானியம். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் என அழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கு 25% மூலதன மானியத்தை அளித்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மானியத்தை அரசு விடுவித்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக் குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு குடிசை மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கான மூலதன மானியத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25% மூலதன மானியம், அதிகபட்சமாக ரூ.1.5 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மானியத்தை அரசு விடுவித்தது. மானியத்தை வழங்க தற்போதைய அரசு நீண்ட காலம் எடுத்துள்ளது.
இயந்திரங்கள் வாங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு தொழில்முனைவோர் மானியத்திற்காக பதிவு செய்ய வேண்டும். வாங்கும் போது, தொழிலதிபர் சொந்தமாகவோ அல்லது வங்கிக் கடன் மூலமாகவோ பணத்தைச் செலுத்த வேண்டும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் மானியத்தை எதிர்பார்த்து முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் காலதாமதம் அவர்களை நிதி ரீதியாக முடக்கியுள்ளது, என்று அவர் கூறினார். வேலாண்டிபாளையத்தில் இன்ஜினியரிங் நிறுவனத்தை நடத்தி வரும் என்.விஜயகுமார் கூறுகையில், “2022 டிசம்பரில் ரூ.22.40 லட்சம் செலவில் இயந்திரங்கள் வாங்கினேன். ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு, ஜூலை 2023ல் மானியத்துக்குப் பதிவு செய்தேன். நவம்பரில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மானியம் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறினார்.
இதுகுறித்து கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.சண்முக சிவாவை கூறுகையில், ”மூப்பு அடிப்படையில் மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 600க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மானியம் கோரி பதிவு செய்துள்ளனர். விரைவில், மே 15, 2023 வரை பதிவு செய்தவர்களுக்கு மானியம் வழங்கப்படும். நிதி கிடைத்த பிறகு, மற்றவர்களுக்கு அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.
Read more ; சாதம் Vs சப்பாத்தி : வெயிட் லாஸ், BP, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எது நல்லது?