தனுஷ் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அப்போது நெட்ஃபிளிக்ஸ் தரப்பில், “திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. காட்சிகள் 2020இல் வெளியான போதும், தாமதமாக 2024ஆம் ஆண்டுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது”.
ஆனால், படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என வொண்டர்பார் நிறுவனம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ஆம் தேதி பட்டியலிட உத்தரவிட்டார்.