விசிக கட்சி நிர்வாகியாக பணியாற்றி வரும் விக்ரமன், கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறிய விக்ரமன், நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். அசீம் முதலிடம் பிடித்த நிலையில், விக்ரமன் 2ஆம் இடம் பிடித்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அசீமும், விக்ரமனும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டது அந்த சீசனை மேலும் விறுவிறுப்பாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் விக்ரமன் மீது கடந்த ஜூலை மாதம் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கிருபாவின் இந்த புகாரை விக்ரமன் திட்டவட்டமாக மறுத்ததோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடினார் கிருபா. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி விக்ரமன் மீது சென்னை வடபழனியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விக்ரமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.