கழிவுநீரை சேகரிக்கும் வாகனங்களுக்கென, விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..
விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அதில் “ விருதுநகர் மாவட்டத்தில், மனித கழிவுகளை அகற்றக்கூடிய செப்டிக் டேங்க் லாரிகளுடன் அகற்றக்கூடிய கழிவுகள், விருதுநகரில் உள்ள நீர்நிலை, ஆற்றுப்படுகை பகுதிகளில் வெளியேற்றப்படுகின்றன.. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளது.. பொதுமக்களும், குழந்தைகளும் இதனால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.. எனவே இவற்றை முறைப்படுத்துவதோடு, விருதுநகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார்..
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை செயலரை எதிர் மனுதாரராக சேர்த்தனர். மனிதக்கழிவு உட்பட கழிவுநீரை சேகரிக்கும் வாகனங்களுக்கென உள்ளாட்சி அமைப்புகள் விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா..? என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..