முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனத்தில் சாதி அரசியல் இல்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”கடந்த அதிமுக ஆட்சியின்போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவரது ஆட்சியில் மின் கட்டண உயர்வு கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் மெத்தனம் காட்டியதால், அங்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக-வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக அரசு வீட்டுக்கு போவது நிச்சயம்.

மக்கள் மத்தியில் திமுக-வுக்கு செல்வாக்கு சரிந்து விட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் கேலிக்கூத்தாகி உள்ளது. அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதிமுக சட்டமன்ற துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர். எந்த பணியை செய்தாலும் அதில் தனித்துவம் மிக்க செயலாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். சட்டமன்ற உறுப்பினர், ஒரு சமுதாயத்தில் இருந்து ஒரு நபருடைய பதவியை எடுக்கும் போது அந்தப் பிரதிநிதித்துவத்தை அதே சமுதாயத்தைச் சேர்ந்த நபருக்கு கொடுத்தால் தான் சிறப்பாக அமையும். அந்த வகையில் ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது சாதி அரசியல் ஒன்றும் இல்லை. தென் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய வகையில் அதிமுகவில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து சமுதாய மக்களும் பாராட்டுகின்ற வகையில் அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார்”. இவ்வாறு அவர் கூறினார்.