மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயதை மாற்றுவதற்கான திட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பதிலளித்திருக்கிறார்.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று விவாதம் நடைபெற்றபோது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம் தொடர்பான கேள்வி மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான எந்தவிதமான திட்டமும் பரிசீலனையில் இல்லை எனவும், சென்ற மூன்று வருடங்களில் 122 அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சேவை விதிகளின் கீழ் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது எனவும், கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 60 வயதிற்கு பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்று வருவதாகவும், டிஜிட்டலைசேஷன் மின் அலுவலகத்தின் மேம்பட்ட பயன்பாடு விதிமுறைகளை எளிமையாக்குதல், மறு சீரமைப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்துவதற்கு என தேவையில்லாத சட்டங்களை நீக்குவதற்கு அரசு தொடர்ந்து, முயற்சி செய்து வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.