தற்போது இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு ரூ.500. முன்னதாக 2,000 நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. இவற்றை மறுபதிப்பு செய்வதையும் நிறுத்தியது. இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது பெரிய நோட்டாக இருக்கும் ரூ.500 மீது மோசடி கும்பல்களின் பார்வை விழுந்தது. போலி நோட்டுகளை தயாரித்து சந்தையில் புலக்கத்தில் விடுகின்றனர்.
புழக்கத்தில் வந்துள்ள போலி 500 ரூபாய் நோட்டுகள் குறித்து உள்துறை அமைச்சகம் முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக DRI, FIU, CBI, NIA, SEBI போன்ற முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குப் பகிரப்பட்ட அந்த எச்சரிக்கையில், போலி ரூபாய் நோட்டுகளின் தரம் உண்மையான 500 ரூபாய் நோட்டுடன் அதிகளவு ஒத்திருப்பதால், கண்டறிவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளது.
போலி நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது ?
அச்சடிக்கப் பட்டிருக்கும் விதம், போலி ரூபாய் நோட்டின் தரம் என அனைத்தும், அசல் ரூபாய் நோட்டுடன் மிக அதிக விகிதத்தில் ஒத்துப்போவதாகவும், போலி ரூபாய் நோட்டு எது என வித்தியாசம் கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.500 அசல் நோட்டுகளைப் போன்றே, அனைத்து நுட்பங்களையும், போலி ரூ.500 நோட்டுகள் கொண்டுள்ளது.
ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற ஆங்கில வார்த்தையில் மட்டும் ரிசர்வ் என்ற வார்த்தையில் இ என்ற ஸ்பெல்லிங் பதிலாக ஏ என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பிழைத் தவிர வேறு எந்த வகையிலும் போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க முடியாத வகையில், புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு: இத்தகைய போலி நாணயத்தால் சந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இது மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. போலி நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த முடியும்.