பேய் ஓட்டுதல் என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த சிறுமியை நெருப்பு கங்குகளை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் மகா சமுந்த் மாவட்டத்தில் ஜெய் குருதேவ் மனாஸ் என்ற ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் தான் அந்த சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காவல்துறையின் அறிக்கையின்படி கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி இரவு ஆசிரமத்தைச் சார்ந்த நரேஷ் பட்டேல், பொஜ்ராம் சாகு மற்றும் ராகேஷ் திவான் ஆகிய மூன்று பேர் சேர்ந்து இந்தச் சிறுமியை நெருப்பு கம்பியால் தாக்கியிருக்கின்றனர். மேலும் நெருப்பு கங்குகளையும் அவரது வாய்க்குள் வலுக்கட்டாயமாக திணித்துள்ளனர். சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அந்த பேயை விரட்டுவதற்காக இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அந்த ஆசிரமத்தின் இயக்குனர் மற்றும் தலைமை குருவான ரமேஷ் தாகூர்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அந்த ஆசிரமத்தின் இயக்குனர் மற்றும் அவரது மூன்று சிஷ்யர்கள் ஆகியோரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தச் சிறுமியுடன் அவரது சகோதரரும் ஆசிரமத்தில் தங்கியிருந்திருக்கிறார். அவர் தேர்வுகளுக்காக வீட்டிற்கு வந்த நேரத்தில் அந்த சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது. அந்த சிறுமிக்கு பேய் பிடித்துள்ள காரணத்தால், சிறுமி போக் பிரசாத் என்ற நபரை விஷம் வைத்துக் கொல்லப் பார்த்ததாக குற்றம் சாட்டி பேயை விரட்டுவதற்காக அந்த சிறுமியை கொடுமை செய்துள்ளனர் இந்த சாமியார்கள். இது தொடர்பாக ரமேஷ் தாக்கூர், போக் பிரசாத் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பேய் ஓட்டுதல் கொடுமையால் சிறுமி மட்டும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள காவல் துறை ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.